Saturday, November 19, 2016

கதை கதையாம் கண்மாயாம்

(நன்றி: என்னுடன் கண்மாய் கண்மாயாய் சுற்றிய தம்பி 'க்ரேசன் டோனி' க்கு)

உசிலங்குளம் கண்மாய்கள் சங்கிலித்தொடரில் மொத்தம் 114 கண்மாய்கள் இருந்தது. திருப்பரங்குன்றத்திலிருக்கும் தெங்கால் கண்மாயில் துவங்கி உசிலங்குளம் கண்மாயில் முடிகிறது இந்த சங்கிலித்தொடர். இதில் 36 கண்மாய்கள் மதுரை மாவட்டத்திற்கு உரியது. இவற்றில் 14 கண்மாய்களில் மதுரை மாநகராட்சி கழிவு நீர் கலக்கிறது. மற்ற கண்மாய்களுக்கு மழைநீரும், வைகையும், நிலையூர் கால்வாயிலிருந்து வரும் நீருமே ஆதாரம்.



அரசாங்கப் பதிவில் இருக்கும் 36 கண்மாய்களை பார்வையிடச் சென்றால் திருப்பரங்குன்றம், கல்லுக்குளம், பெருங்குடி மக்களுக்கு அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் அமைந்துள்ள இடமும், அதன் சரியான பெயரையும் அறிந்திருக்கவில்லை. ‘அபிசேகக்கட்டு’ என்ற கண்மாயை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரித்து தேடினோம். அந்த பகுதியில் வசிக்கும் எவருக்குமே தெரியவில்லை. இறுதியாக கீதாரிகளே கண்மாய்களுக்கு சரியாக வழி சொன்னார்கள். ‘அபிசேகக்கட்டு (எ) அவிசயத்தி’ கண்மாய்க்கு வழி சொன்ன கீதாரி கிழவி, ‘இப்ப சொந்த ஊர்காரன் யாருமே இல்ல. எல்லாம் வெளியூர்ல இருந்து வந்துருக்கானுவ. ஒருத்தனும் விவசாயம் பாக்கல. அப்பரம் எப்புடி கண்மாயப்பத்தி தெரியும்? செவிடன் காதுலப்போய் நீ சங்கூதிட்டு வந்திருக்க. எங்களப்போல கீதாரிக்கும் விவசாயிக்கும் தானே கண்மாய்க!’ என்று சொன்னாள்.


கருவை மண்டிக்கிடக்கும் அபிசேகக்கட்டு கண்மாய்


நீர் மேலாண்மையில் நம் சமூகப் பட்டறிவின் விளைவே கண்மாய்கள் மற்றும் அதன் சங்கிலித் தொடர்கள். அதிக வடிநீர் வரத்தையும் அதே சமயம் அதிக கொள்ளளவையும் உறுதிசெய்யும் அரை பிரைவடிவ  கண்மாய்களை ஆயிரம் ஆண்டுகள் முன்பே அமைத்தார்கள் நம் முன்னோர்கள். இங்கு தேக்கப்படும் நீரானது விவசாயத்திற்கும், கால் நடைகள் மற்றும் மனிதர்கள் தேவைகளுக்காகவும் பயன்படுகிறது.  பாசனத்திற்காக நீரைத் திறந்துவிட மடைகள் அமைக்கப்பட்டன. மடையைக்கொண்டு திறந்துவிடப்படும் கொள்ளளவே விவசாயத்திற்கு பயன்படும் நீர். மடையால் திறந்துவிடப்பட முடியாத கொள்ளளவு கால்நடைகளின் தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள். பொதுவாக வறண்ட பகுதிகளில் இந்த கொள்ளளவின் ஆழம் மடையின் அடிப்பகுதியில் இருந்து 3-5 அடி இருக்கும். ஆயிரம் ஆண்டுகள் முன்பு மரத்தால் மடைகள் அமைக்கப்பட்டன. நீர் தேவையின் போது கண்மாய்க்குள் குதித்து மடையை திறக்கும் சாகசக்காரர்கள் “மடையர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு நீரில் மூழ்கி மூச்சடக்கி மடையை திறக்கும்போது நீரின் சுழலில், வேகத்தில் சிக்கி இறந்தவர்கள் பலர். ஆகையால் மடையர்கள் மடை திறக்க நீரில் குதிக்கும் முன் அவர்களுக்கான இறுதி சடங்கை ஊரார் செய்வது வழக்கம். தான் இறந்தாலும் தன் குடும்பத்தை ஊர் காக்கும் என்ற நம்பிக்கையில் தன் குடி காக்க உயிரையும் துச்சமாக எண்ணியவர்கள் மடையர்கள். (நன்றி: ‘டி.எல்.சஞ்சீவிகுமாரின் ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’)


‘தகப்பன இழந்த பிள்ளைகள ஊர் காப்பாத்தும்னு நம்பி ஏமாந்தாங்க போல. அதுனாலதானோ என்னவோ மடையர்னா ஏமாந்தவன்னு ஆகிடுச்சு. ஆனா நாங்க அப்புடி இல்ல’ என்று ஆரம்பித்தார் ராமன்குளத்தைச் சேர்ந்த பெரியவர். ‘வைகைல மணல் அள்ளி பள்ளமா போச்சு, அங்க இருந்து எங்க கம்மாய்க்கு தண்ணி கொண்டார நிலையூர் காவா மேடுதட்டி போச்சு. போய் பாருங்க கம்மா கரைக்கு பின்னாடி வெறும் கருவ மரமாதான் நிக்கும். தண்ணி வந்து பல வருசமாச்சு. நெலம் தருசா போச்சு. அதான் ரோடு போட மண்ணு வேணும் ஊருக்கும் ரூவா தறோமுனு சொன்னானுவ. வாங்கிட்டு விட்டுட்டோம். ஆத்து தண்ணி விவசாயம் நின்னு பல வருசமாச்சு. பூரா பயலும் பம்புசெட்டு வச்சுருக்கானுவ, அதுலதான் வெளையுது மதுர மல்லி’.

தூர் வாரப்பட்ட பாப்பனோடை கண்மாய்

ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக தேவைப்படும் மண்ணை தனியார் நிறுவனம் கண்மாய்களில் அள்ளிக்கொள்ள மக்கள் அனுமதியோடு அரசு அனுமதித்தது. இப்படியாய் மண்ணுக்காக தூர் வாரப்பட்ட கண்மாய்களில் மதுரை உசிலங்குளம் கண்மாய்கள் சங்கிலித்தொடருக்கு உட்பட்ட ராமனோடை, சின்ன உடைப்பு, பாப்பனோடை, பெரியகுளம் கண்மாய்களும் அடங்கும். “தூர் தான் வருவான்னு நெனச்சா வேரையே வாரிபுட்டானுவ படுபாவிங்க” என்கிறார் பாப்பனோடை கிராம வாசி.
கண்மாயை பார்த்து அதிர்ந்தே போனோம். தூர் வாரப்பட்ட இந்த கண்மாயில் மடையின் அடிப்பகுதிக்கும் கண்மாயின் அடிப்பகுதிக்கும் குறைந்தது 12 அடி உயரம் இருக்கிறது. நம் சூழலில் மடை திறக்கப்படும் அளவிற்கு கூட கண்மாய் நிரம்பாது என்பது உறுதி. ஆனால் பாப்பனோடை கண்மாயின் நிலைமையை கண்டும் கூட அருகிலிருக்கும் சின்ன ஒடைப்பு மக்கள் விளித்துக்கொல்லாது தங்கள் கண்மாயையும் தூர் வார அனுமதித்துவிட்டனர். அங்கும் தூர் வாரும் பனி சிறப்பாக நடைபெறுகிறது.


சின்ன ஒடைப்பு கண்மாய் தூர்வாரி மண் அள்ளும் காட்சி


‘இந்த ஊருகாரன் எல்லாம் முட்டாக்...... நான் படுச்சு படுச்சு சொன்னேன் பப்பனோடை பயலுவ நெலமைதான் நமக்கும்னு. எவன் கேட்டான். எல்லாம் கட்சிகாரனோட சேர்ந்துகிட்டு பணத்த வாங்கிட்டு ஆடுறானுவ’. ‘வெவசாயிக்குதான் அந்த கம்மாயோட அருமை தெரியும். வெவசாயம்தான் போச்சே’ என்று ஆற்றமையுடன் தொடர்ந்தார் சின்ன ஒடைப்பு கண்மாய் விவசாயி. ‘ஆனா குதிரப்பட்டி மக்க ஒன்னா நின்னு சாதிச்சுபுட்டாங்கே. ஒரு புடி மண்ண அள்ள முடிஞ்சுதா? அவனுக ஏமாந்தவங்கே சின்ன ஒடைப்புக்காரனுவனு இங்க வந்து அள்ளுறானுவ’

குதிரைப்பட்டியை பார்க்க புறப்பட்டோம். பயணிக்கும் வழியில் போடோ பழங்குடியான ‘டீஜுள் புசுமுத்தாரி’ சொன்ன கதை நினைவிற்கு வந்தது. ஒரு மனிதன் இருந்தான். அவன் வேட்டையாடி வாழ்பவன். தினமும் ஒரு மரத்தருகே சென்று கதை சொல்வதையும், அவ்வப்போது பழம் கொண்டு வருவதையும் வழக்கமாய் கொண்டிருந்தான். ஒரு கோடை காலத்தில் வேற்று தேசத்துக்காரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். மரத்துக்கு கதை சொல்லிக்கொண்டு இருப்பவனை கண்டு வியப்படைந்தான். வினவினான். அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டு சிரித்தான்.

“அப்படியென்றால் பசித்தால் தான் சாப்பிடுவாயா?”

“ஆமாம். பசித்தால் தானே சாப்பிடவேண்டும்”.

“எனக்கு ஒரு பழம் கொடேன்”.

“நீ பசியோடு இந்த மரத்தடிக்கு வா. உனக்கான பழம் கீழே விழும்.”
எல்லாவற்றையும் கேட்டறிந்த வேற்று தேசத்துக்காரன் தன் பையில் இருந்த ஒரு பிடி விதைகளைக் கொடுத்து, “இதை விதைத்து, வரும் தானியங்களை உன் உணவுக்கு பயன்படுத்திக்கொள். ஒரு பிடியை மீண்டும் விதைத்துக்கொள். இதை சேமிக்கலாம், வேண்டும் சமயத்தில் சமைத்துக்கொள்ளலாம்” என்று கூறி விடைபெற்றான்.

மனைவியிடம் இந்த அதிசய விதைகளை பற்றி சொன்னான். பல யோசனைகளுக்குப் பின்னர் இருவரும் விதைகளை விதைத்தனர். தானியங்களை அறுவடை செய்தனர். நினைத்தப்போதெல்லாம் உண்டு மகிழ்ந்தனர். விவசாய நிலத்தை பெருக்கினர்.

காலம் கடந்தன. குழந்தைகள் பிறந்தன. மரத்துக்கு கதை சொல்வதை விடுத்தான். மரம் கொஞ்சம் கொஞ்சமாக வாடியது. பழம் தருவதையும் நிறுத்தியது. விளைந்த தானியங்களை அவன் குடும்பத்தினர் ஆசை தீர உண்டு வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மரத்தின் நிழல் விளைச்சலைக் குறைப்பதால் மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

திடீரென்று ஒரு நாள் கடும் வெள்ளம் வந்தது. பயிர்கள் முழுவதும் நாசமாயின. கொஞ்சமாய் சேமித்த தானியங்களும் தீர்ந்தன. அவன் குழந்தைகள் பசி தாங்காமல் அழுதன. அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. அவன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு  கதை சொல்ல துவங்கினான். ‘ஒரு காலத்தில் நம் ஊரில் ஒரு கிழவன் இருந்தார். அவர் தன் மகனுக்கு ஒரு மரத்தைக் காட்டி, “இது ஒரு அதிசய மரம். தினம் காலையும் மாலையும் இந்த மரத்தடியில் அமர்ந்து மரத்துக்கு கதை சொல்ல வேண்டும். இந்த மரம் உயிர் வாழ கதை சொன்னால் போதும். வேட்டையாடி ஏதும் கிடைக்காது, பசியோடு ஒருவன் அங்கு போய் அமர்ந்தால் இந்த மரம் பழம் ஒன்றை கீழே போடும். பழம் எங்கிருந்து வரும் என்று யாருக்கும் தெரியாது. அந்த மரம் இருந்தவரை யாரும் பசியோடு இருந்ததே இல்லை. அந்த மனத்தை...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே குழந்தைகள் கேட்டன, “அந்த மரம்  இப்ப எங்கப்பா?”   

இப்படியாய் கதை முடிகிறது(?).

குதிரைபட்டி சென்று சேரும்போது லேசாக இருட்டத்துவங்கியது. மளிகை கடையில் கண்மாய்க்கு வழி கேட்டோம். “கம்மாயப் பார்க்க வர நேரத்தப்பாரு. இந்த சந்துல சோத்தாங்கை பக்கம் திரும்பி, நேரா போயா கம்மாய் வந்துரும்” என்று அக்கறையோடு வழிசொன்னார் கடைக்கார அக்கா. கண்மாயை பார்த்தோம். கண்மாய் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தது.  தெளிந்த நீரைப்பார்க்கும்போது மனதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கண்மாயை காக்க விவசாய மக்களே ஒன்று திரண்டுள்ளனர், அரசிடம் தொடர்ந்து முறையிட்டு, மனுக்கொடுத்து, கொதிக்கும் தார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, தூர் வார வந்தவர்களை ஊருக்குள் விடாமல் தடுத்து, குளிக்க தனியே நீர்த்தொட்டி அமைத்து, தாங்களாக கண்மாயை சீரமைத்துள்ளனர். கண்ணும் கருத்துமாய்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.


No comments:

Post a Comment