Wednesday, December 21, 2016

காஷ்மீர் என்றொரு ஆட்டுக்குட்டி

திப்ரூகர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் தீமாப்பூர் வருகையில் B1 கிட்டத்தட்ட நிரம்பியது. முக்கால்வாசிபேர் ராணுவ வீரர்கள். நாகாலாந்து தீவிரவாத போராளிகளை ஒடுக்கும் இந்திய ராணுவப்படையை சேர்ந்தவர்கள். அந்த பெட்டி முழுவதும் அவர்கள்தான் என்பதில் ஒரு சுதந்திரம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. எல்லோருமே தென்னிந்தியர்கள். விடுமுறைக்கு செல்கிறார்கள். இந்த விடுமுறையில் தங்கள் வாழ்வின் கடமைகளை கொஞ்சம் முடித்து வரவேண்டும். செல்வத்துக்கு திருமணம். மேனனுக்கு நிச்சயம். சுகுமாருக்கு வீடு கட்ட வங்கி கடன் வாங்க வேண்டும். வெங்கட்டுக்கு சொத்து பிரிக்கவேண்டும். தினேஷுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவேண்டும். இப்படி பல கடமைகள். ஆரம்பத்தில் பேச்சு கடமைகள் சம்பந்தமாகவே இருந்தது. ஊருக்கு செல்லும் மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் இருந்தது. செல்வத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே. அவன் மட்டும் போன் பேச அடிக்கடி கதவு பக்கம் போய்வந்தான்.

நேரம் செல்ல செல்ல பேச்சு தாங்கள் பணியாற்றிய மற்ற ரெஜிமென்ட் பற்றியதாய் மாறியது. சிலர் அருணாச்சல் குளிரில் ஐஸ் கட்டிகளை சுத்தம் செய்தததை பற்றியும் சிலர் காஷ்மீரில் போரிட்டது பற்றியும் சிலர் அங்கு கிடைக்கும் உணவு பற்றியும் சமயங்களில் பெரிய அளவில் சமைத்த உணவுகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் அலுப்புத்தட்ட துவங்கியது. அவர்கள் மது அருந்த துவங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய்தான். சுகுமார், தான் ஒருமுறை போட்டுக்கொடுத்த தேநீர் தன் உயர் அதிகாரிக்கு பிடிக்காமல் போனதற்காக ஆபாசமாக திட்டி கோப்பையை முகத்தில் வீசியதை பற்றி சொல்லி வருத்தப்பட்டார். அவரர் தாங்கள் அனுபவித்த அவமானங்களை சொல்லித் தீர்க்க முயன்றனர். கவலையில் கொஞ்சம் கூடவே செய்தது குடி.

குடி ஏற ஏற குடி கெடுத்த கதைகள் துவங்கின. தாங்கள் செய்த காம அதிகாரங்களை அடுக்கினர். முதல் கதையின், “என் பொண்டாட்டி நெனப்பு வரப்பெல்லாம் அந்த மளிகை கடைகாரிட்டதான் போவேன்” என்றபோது,  செல்வம் மட்டும் கதவுக்கு போய்விட்டான்.

‘“ஷில்ப்பி”. சொல்லும்போதே அவர்களுக்கு வாயெல்லாம் பல். ஆறு மாச கைக்குழந்தையும் அவளும் ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள குடியிருப்பில் வாழ்கிறார்கள். அவள் மார்பகங்கள் பால் சுரக்க மறுத்தாலும் அதை பார்க்க முகாமில் அத்தனை அத்தனை கண்கள். அவள் இதுவரை பல முறை அந்த சாலையில் கடந்திருந்தாலும் மருந்துக்கும் அவர்களை பார்த்ததில்லை.

அன்று பார்த்தாள். எதோ வேண்டும் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.

அவன் கேட்டபோது சொன்னாள், “பிள்ளைக்கு பசி. அழுகுது. பால் பௌடர் வாங்க காசில்ல. வங்கியும் தெறக்கல. கைல இருக்குற பணமும் செல்லல”.

அவளிடம் இருந்தது வெறும் 572 ரூபாய். அதில் ஒன்று 500 ரூபாய். இங்கு எந்த ஏடிஎம் மும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆயிற்று அது இயங்கும் என்று நம்பி.

பால் பௌடரை கையில் வைத்துக்கொண்டு கதைவை அடைத்தான்.
முதலில் துப்பாக்கி முனை முலையை தீண்டியது. பின் இயந்திரம் இயங்கத்துவங்கியது.

“பசினு வந்துட்டா பட்டாளத்தான்ட்ட படுத்துதானே ஆகணும்”.’

மது அவர்கள் கற்பனை செய்துக்கொள்ள வசதி செய்தது. அந்த எழுச்சியுடன் தூங்கப்போனார்கள்.

செல்வம் மட்டும் போனில் பேசிக்கொண்டிருந்தான். கும்மிருட்டில்.

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே வாசலை கூட்டத்துவங்கினாள் மீனாம்பாள். பெயர் மீனாம்பாள் என்றாலும் அவளை ‘முசுடு’ என்றுதான் ஊர்க்கார்கள் அழைப்பார்கள். கணவன் இறந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆயிற்று. இத்தனை வருடங்களாய்  குடியிருப்பை விடுத்து அவள் மட்டும் தனியாக வயலை தூற்றிவிட்டு சின்ன வீடு கட்டி இங்கு வந்து வாழ்கிறாள்.

வாசல் கூட்டிக்கொண்டு இருந்தவள் வெலக்கமாரை நிறுத்தி நிமிர்ந்து,

“டேய் நட்ராசு! சொக்கன டீக்கடையில பார்த்தா வரசொன்னேனு சொல்லுடா!” என்றாள்.

“சரி ஆத்தா. சொல்றேன்”.

சொக்கன் முனிக்கோயில் பூசாரி. அந்த ஊரில் சேரி ஆட்களை தவிர அவள் மட்டும்தான் முனியை வணங்குபவள். தினேஷுக்கு பாம்பு தீண்டியதில் இருந்து முளைத்த நம்பிக்கை. தினேஷ் ஒரே மகன். ராணுவத்தில் வேலை. இந்த ஊரில் அவன் பிறந்த காலத்து குழந்தைகளின் பெயரெல்லாம் ‘ஷ்’இல் தான் முடியும். அவன் மாமா காலத்து பெயர்கள் ‘நாதன்’னிலும், அப்பா காலத்து பெயர்கள் ‘சாமி’யிலும், தாத்தா காலத்து பெயர்கள் ‘அய்யா’வென்றும் முடியும். இப்படியாய் கருப்பைய்யாவுக்கு பிறந்த பழனிசாமியின் மகன் தான் தினேஷ். தினேஷ் தன் மாமா லோகநாதனின் உதவியால் தான் ராணுவத்தில் சேர்ந்தான். இப்போது அஸ்ஸாமில் ‘ரெட் ஹார்ன்ஸ்’ படைப்பாசறையில் பணியாற்றி வருகிறான்.

“என்ன ஆத்தா! கூப்ட்டுட்டிகலாமே!”

“முனியையாவுக்கு பூச போடணும்டா. அடுத்த வாரம் புதன்கிழமை” சாணி மொழுகிக்கொண்டே சொன்னாள்.

தம்பி வருதா ஆத்தா?
ஆமாடா
அப்ப அம்மணியும் சின்னதம்பியும் வருவாகளே?
ம்ம்ம். பன்னேன்ற காருக்கு வாராக என்றவள் பூசைக்கு வேண்டிய பொருட்கள் வாங்க 2௦௦௦ ரூபாயை நீட்டினாள். வாங்கிக்கொண்ட கொக்கன் கிளம்பினான்.

ஆட்டை குளத்தில் குளிப்பட்டிகொண்டிருக்கையில் நேரம் பன்னிரண்டு அரை. பேருந்திலிருந்து இறங்கி மருமகளும் பேரனும் வந்தார்கள். எப்போது தினேஷ் வந்தாலும் அவன் வருவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் மருமகள் பிரவீனுடன் தன் வீட்டிலிருந்து வருவாள். இது தினேஷுக்கும் தெரியும். கண்டு கொள்ளமாட்டான். 

பிரவீன் நேரே ஆட்டிடம் வந்து, ‘காஷ்மீர் எப்புடி இருக்க?’ என்று கேட்டு ஆட்டு வயிற்றில் தடவினான்.

போனமுறை பிரவீன் வரும்போது ‘காஷ்மீர்’ ஆட்டுக்குட்டியாக இருந்தது.

“இதுக்கு ஏன் ஆத்தா ‘காஷ்மீர்’ னு பேரு?”

“உங்கப்பன் காஷ்மீருக்கு போனப்ப, ‘முனியையா நீதான் பொறுப்பு உம்புள்ள பாதுகாப்புக்கு. அவன் அங்கிருந்து வந்ததும் உனக்கு கேடா வெட்டி பூச வைக்குறே’னு வேண்டிகிட்டேன். அதான் இந்த குட்டிக்கு ‘காஷ்மீர்’ னு பேர் வச்சேன்”.

இப்போது காஷ்மீர் ஆடாக வளர்ந்து நின்றது.

அவன் பொழுதுகள் காஷ்மீரோடுதான் கழிந்தது. காஷ்மீரை தூக்க முயற்சிப்பான். கட்டிப்பிடிப்பான். முத்தம் கொடுப்பான். வித விதமான இலைகளை, பூக்களை பறித்து வந்து ஊட்டுவான். மாலை செய்து அவன் கழுத்திலும் காஷ்மீர் கழுத்திலும் போடுவான். அவன் கையில் பொங்கல் மணியும் கோபி கத்தியும் எப்போதும் இருக்கும். அப்பா வாங்கிவந்த விளையாட்டு சாமான்கள் அலுத்தவனுக்கு காஷ்மீர் மட்டும் அலுக்கவே இல்லை. பூசை நாள் நெருங்குவது கூட தெரியாமல் தினம் தினம் விளையாட்டுதான்.

பூசை நாள். குளிப்பாட்டிய ஆட்டை கூட்டிக்கொண்டு தந்தையுடன் புறப்பட்டான் பிரவீன்.

“கொரபோடுறப்ப, பலி கொடுக்குறப்ப புள்ள பயந்துடுவான். பாதுக்கப்பூ” என்று தினேஷிடம் சொல்லித்தான் அனுப்பினாள் மீனாம்பாள்.

சொக்கன் வேட்டி மட்டும் உடுத்தி திருநீறு பட்டையே சட்டையாக உடுத்தி பூசை செய்துகொண்டிருந்தார். ஆடு மாலையுடன் தினேஷுக்கு கட்டுப்பட்டு நின்றது.



நேரம் ஆக ஆக சாம்பிராணிப் புகை சொக்கனை சூடேற்றியது.

“ஏஏஏஏஏஏ.....” என்று குரல் போட்டு கிழக்கு நோக்கி ஓடினார் சொக்கன். இதை எதிர்பாரா பிரவீனின் உடல் ஒரு குலுக்கு கண்டது. அவரை பிடிப்பதற்கே தயாராக நின்றவர்கள் மடக்கி பிடித்தார்கள். வெட்டரிவாளை கையில் கொடுத்தார்கள்.

முனி ஆட ஆரம்பித்தார்.
காஷ்மீரை கொண்டு வந்தார்கள்.

“பின்னாடி திரும்பிக்க! பார்த்தா பயந்திடுவ!” என்று சொல்லி பிரவீனை தூக்கி தொழில் போட்டுக்கொண்டான் தினேஷ்.

இரண்டாள் தூக்கவேண்டிய வெட்டரிவாளை முனி தூக்கி பிடிக்கையில் சுமை தாங்காமல் கைகள் நடுங்கின. நிலைமையை உணர்ந்து சின்னான் காஷ்மீரின் தலையில் நீர் தெளித்தான். தலை சிலுப்பவே இல்லை. மீண்டும் ஊற்றினான். ‘செவனேன்’ என்று நின்றது.

முனி வெட்டரிவாளை கீழிறக்கி மண்ணில் ஊன்றி அதன் ஒத்தாசையில் நின்று, “என்னடா எதுவும் தப்புதண்டா செஞ்சிட்டியா?” என்று கேட்டடார் முனி.

“பொல்லாத சாமியாக்கும் சொல்லிடு”.

“என் புள்ள சத்தியமா ஒரு தப்பும் செய்யல சாமி” என்று உள்ளங்கை வியர்க்க சொன்னான், தினேஷ்.  

மீண்டும் வெட்டரிவாளை உயர்த்தி “இப்ப உத்தரவு கொடுக்கப்போறியா இல்லையா?” என்றதும் காஷ்மீர் சிலுப்பியது.

‘மேஅஅஅஅ’

திரும்பி பார்த்த பிரவீன் முகத்திலும் கொஞ்சம் ரத்தம் தெரித்தது.
‘காஷ்மீர்’ முண்டமானது.

அடுத்த நாள் பிரவீனுக்கு காய்ச்சல் கண்டது. நடுச்சாமத்தில் திடுக்கிட்டு எழுந்தவன், “காஷ்மீர்! காஷ்மீர்!” என்றான்.

“புள்ள பயந்திருக்கு. என்னய்யா வேணும்?” என்றாள் மீனாம்பாள், பிரவீனை மடியில் சாய்த்துக்கொண்டு.

“காஷ்மீர ஏன் ஆத்தா வெட்டுனாங்க?”

“உங்கப்பா காஷ்மீர்ல இருக்கப்ப முனியைய்யா தான் பாதுகாப்பா இருந்தாரு உங்கப்பாருக்கு. வேண்டுதல செய்யாட்டி முனி கொவம்கொண்டுக்கும். அதான் நம்ம காஷ்மீர கொட குடுத்தோம். இனி ஒரு பயமும் இல்ல. நம்மல முனியைய்யா பத்திரமா பாத்துக்குவாரு. நீ துங்கு சாமி” என்று சொல்லி ஒரு பிடி திருநீரை அவன் நெற்றியில் பூசினாள்.

பிரவீன் சற்று நீரத்தில் தூங்கிப்போனான். மீனாம்பாளும்.


காஷ்மீரின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது காதில்லாதவர்களுக்கு.

Monday, November 21, 2016

கனவுகளை சுமக்கும் கழிவு கண்மாய்கள்

தன்னை ‘பீ’யால் பல வழிகளில் இழிவுபடுத்திய ஆதிக்க சாதியை எதிர்க்க, அவர்களின் நீர் நிலைகளில் பீ பேல்வதை போராட்ட வடிவமாக்கினர் தாழ்த்தப்பட்ட சாதியினர். இதை இலக்கியங்களிலும் வாய்மொழிக்கதைகளிலும் காணமுடியும். எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய “பீக்கதைகள்” சிறுகதை தொகுப்பில் ‘சாதிய பண்பாட்டு அசைவுகளில் பீ எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது’ என்பதை படிப்பவர்கள் மூக்கை மூடும் அளவுக்கு அழுத்தமாய் சொல்லும் கதைகள் இடம்பெற்றுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலங்குளம் கண்மாய்கள் சங்கிலித்தொடரில் உள்ள 14 கண்மாய்களிலும் கொந்தகை கண்மாய்கள் சங்கிலித்தொடரில் உள்ள 6 கண்மாய்களிலும் மதுரை மாநகராட்சி கழிவு நீர் கலக்கிறது. இங்குள்ள கிருதுமால், சிந்தாமணி, அவனியாபுரம், சொட்டதட்டி, பனையூர் கால்வாய்களில் வைகை நீர் பாய்வதற்கு பதிலாக தென் மதுரை கழிவுநீர் மற்றும் வழிவு மழைநீர் பாய்கிறது. இவற்றில் 7 கண்மாய்களைத் தவிர மற்ற கண்மாய்களில் கழிவுநீர் எந்த சுத்திகரிப்புமற்று நேரடியாகப் பாய்கிறது.

1926ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் பொது பணித்துறையானது மதுரையில் உற்பத்தியாகும் கழிவுகளை உயிரியல் முறையில் சுத்திகரிக்க, வெள்ளைக்கல் கிராமத்தில் பிரஞ்சு கழிவுநீர் வடிகட்டிகளைக் கொண்ட கழிநீர் பண்ணை ஒன்றை அமைத்தார்கள். இதிலிருந்து வெளியேறும் நீரானது விவசாயத்திற்கு பயன்பட கண்மாய்கள் சங்கிலித்தொடரில் இணைக்கப்பட்டது. இந்த பண்ணையானது இப்போது மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிப்பின்றி செயல்படாமல் போனாலும், இங்கிருந்து வெளியேறும் நீரானது இன்றும் அங்குள்ள 7 கண்மாய் விவசாயத்திற்கு ஆதாரமாய் இருக்கிறது. இப்பண்ணையை ஒவ்வொரு வருடமும் 60-70 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுகிறார்கள். கீரை மற்றும் தீவனப்புல் விளைவிக்கும் விவசாயிகள்  மாதம் ஒரு குண்டுக்கு 600 முதல் 1200 வரை குத்தகை பணம் செலுத்துகிறார்கள். இக்கழிவுகளில் வேலை செய்பவர்கள் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளானாலும், வரும் வருவாய்யை கொண்டு பாதிப்பிலிருந்து மீளமுடிவதாக கூறுகிறார்கள்.  இங்குள்ள கண்மாய்களை மீன் வளர்க்க ஏலம் எடுப்பவர்கள் நீரில் விடவேண்டிய குஞ்சுகளின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரித்து விடுகிறார்கள். கழிவு நீரில் வளர்ந்த மீன்கள் ஒருகட்டத்தில் பிராண வாயு இன்றி மொத்தமாக சாகின்றன. இதையே காரணம் காட்டி அடுத்த வருட ஏலத்தையும் இவர்களே தக்கவைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். இப்படி கழிவுநீரை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்வது ஒரு பக்கம் இருக்க, தவராம்பூர் கண்மாய் (இக்கண்மாயே கழிவுகளால் முதலில் பாதிக்கப்படுகிறது) விவசாயிகள் பண்ணையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் விளைவுகளை சமீபத்தில் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.  தவராம்பூர் விவசாயி முருகன், “முன்ன நெல்லு வெளஞ்ச வயல்ல இப்ப புல்லு தான் வெளையுது. முன்ன புல்லு வெளஞ்ச வயல்ல இப்ப சம்புதான் வளருது” என்றார். மண்ணில் தொடர்ந்து செறிவான கழிவுநீரைப் பாய்ச்சும்போது மண்ணில் உயிர்சத்து தேவைக்கதிகமாய் தங்குகிறது. இது மண்ணின் அமைப்பையே மாற்றுகிறது. இதனால் சம்பு போன்ற களைகளே இந்த மண்ணில் வளரமுடிகிறது.

கழிவுநீர் கால்வாய்

ஆனால் கழிவுநீர் கண்மாய்கள் சங்கிலித்தொடரில் ஐந்தாவதாக அமைந்துள்ள தின்னானேரி விவசாயி ‘அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. இது இருக்கதால தான், அங்க பாரு’, என்று வயல் இருக்கும் திசையில் கை காட்டி ‘நெல்லு நிக்குது. இல்லாட்டி கூடல்செங்குளம் மாதிரி சும்மாதான் போட்டிருக்கணும்’ என்றார்.

கழிவுகளின் கிடங்காய் சிந்தாமணி கண்மாய் 

சிந்தாமணி கண்மாய் கழிவு நீர் பாசனத்துக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் நிலத்தில் இரண்டு போகம் நெல் விளைகிறது. இங்குள்ள தூளியப்பட்டி (எ) தூளிவத்தி கண்மாய் விவசாயிகள், கடந்த மூன்று வருடங்களாக ஒரு விசித்திரமான பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக நீலத்தாழைக் கோழிகள் அங்குள்ள கண்மாயில் வாழ்ந்து வருகிறது.
நீலத்தாழைக் கோழி
இவை நீர்த்தாவரங்களின் குருத்தினை, சிறு உயிரிகளான தவளை
, நத்தை போன்றவற்றை மற்றப்பறவைகளின் முட்டைகளைத் திருடி உண்ணும். இப்பறவைகள் இங்குள்ள நெல் நாற்றை பிடுங்கி அதில் உள்ள குருத்தை மட்டும் வெட்டித் தின்பதில் கில்லாடிகள். இந்த கோழிகள் வயலில் ஆள் இல்லாத சமயத்தில் மொத்தமாக இறங்கி பயிர்களை நாசம் செய்கின்றன. வயலை பார்க்கையில் நாற்றையெல்லாம் கத்தரித்து போட்டது போல காட்சி அளிக்கிறது. plastic bottleகளை, பாத்திரங்களை தட்டிக்கொண்டும், சேலையால் வயலுக்கு வேலி அமைத்தும், வான வெடிகள் போட்டும், இரவும் பகலும் தங்கள் கழனியை காவல் காக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் தங்கள் வருவாயில் 4௦% குறையும் என்கிறார்கள் தூளிவத்தி விவசாயிகள்.  இந்த பறவைகளை வெடி வைத்து விரட்டவோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவோ வனவுயிரியல் பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை. இந்த கோழியின் பெயரை கூட அறியாத அந்த விவசாயிகள், ‘சனியன்யா இது. அப்புடியே கூட்டமா எறங்கி கறுது அறுக்குற மேசினாட்டம் வேட்டிபுடுந்துங்க. வாய பார்த்த ரம்பையாட்டம் இருக்குங்க. அப்புடியே பயிர் பூராத்தையும் கத்தருச்சுப்புடுதுங்க. இதுக்கொரு வழி பண்ணிப்புடுங்க புனியமா போகுமுங்க’ என்றார்கள். கதிர் பால் பிடிக்கிறவரை இப்பறவைகளிடம் மல்லுக்கட்டும் இவர்கள், பயிர் முற்றிய சமயத்தில் பன்றிகளுடனும், மயில்களுடனும் போராடுகிறார்கள்.  

நீலத்தாழைக் கோழியால் கத்தரிக்கப்பட்ட நாற்றுகள்


போராட்டம் என்றால் தோழர் இல்லாமலா? கத்தியனூர் கண்மாயில் கழிவுநீர் வரத்துக்காக தோழர் சேதுராமன் கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகிறார். கத்தியனூர் கண்மாய்க்கு உட்பட்ட விவசாய நிலங்கள் அங்குள்ள பள்ளிவாசலுக்கு உரியது. சுமார் 25 விவசாயிகள் குத்தகைக்கு இங்கு விவசாயம் செய்கிறார்கள். அனுப்பானடியில் ஏற்பட்ட பல கட்டுமான பணிகளால் இந்த கண்மாய்க்கு வரவேண்டிய கழிவு நீர் திசை திரும்பி அனுப்பானடி வயல்களுக்கு பாய்ந்தது [அனுப்பானடி கண்மாய்கள், விரகனூர் கண்மாய் இப்பொழுது இல்லை. வீட்டு வசதி வாரியமும், நெடுஞ்சாலைத் துறைரும் வாயில் போட்டுக்கொண்டன நகரத்தின் தேவைக்கருதி]. சோளம் மட்டுமே விளைவித்து வந்த அனுப்பானடி விவசாயிகள் கழிவு நீர் வரத்து அதிகரித்தவுடன் நெல்லுக்கு மாறினார்கள். இதனால் கத்தியனூர் கண்மாயில் நீர் வரத்து குறைந்தது. இந்த சூழலை
 சாதகமாக்கிக்கொண்டு சில விவசாயிகள் கண்மாய் முகப்பில் கீரை விளைவிக்க துவங்கிவிட்டார்கள். 
கத்தியனூர் கண்மாய் முகப்பில் கீரை விவசாயம்
தோழரின் முயற்சியில் விவசாயிகள் மற்றும் பள்ளிவாசலின் பங்குத்தொகையோடு கண்மாய் நல்லமுறையில் தூர்வாரப்பட்டுள்ளது. தடுப்புகளை உடைத்து வரத்து கால்வாயை சரி செய்ய விண்ணப்பங்கள், மனுக்கள் தொடர்ந்து கொடுத்து வருக்கிறார் தோழர். நெல்லால் லாபம் கண்ட அனுப்பானடி விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராது கால்வாய் தடுப்புகளை உடைக்க முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். தேர்தலை ஒட்டி அரசு முடிவெடுக்காமல் காலம் தாமதித்து வருகிறது.

ஒருபக்கம் கழிவுநீருக்காக போராடும் மக்கள் மறுபக்கம் குடிநீருக்காகவும் போராடுவதுதான் எதார்த்த உண்மை. இதை வணிகமாக்க சுமார் 50 நிறுவனங்கள் குறிப்பாக கோச்சடையில் மட்டும் 15 குடிநீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இதில் பெப்சியும் அடக்கம். பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி பணம் கொடுத்து வாங்கும் நீரின் நம்பகத்தன்மைக்கு ‘மடைக்கருப்பரே’ சாட்சி.

குடிநீர் கொள்கலன்கள் 

மதுரையில் கழிவுநீரில் விளை பொருட்களை உண்பதால் உணவு சங்கிலியில் ஏற்படும் கன உலோக அளவின் மாறுதல்களை 1997 லில் முனைவர் N.சந்திரசேகரன் ஆராய்ந்துள்ளார். அவர் ஆய்வின் படி இங்குள்ள வெட்டுக்கிளி, மண்புழு, தீவனப்புல், நெல் மற்றும் கீரைகளில் கன உலோகம் அதிக அளவில் இருப்பதாக, குறிப்பாக இதை உட்கொள்ளும் மனிதனின் குருதியில் கேட்மியம், ஈயம் மற்றும் தாமிரம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக பதிவுசெயத்துள்ளார். இவ்வாராய்ச்சி 20 வருட பழைமையானது என்றாலும் கவனத்திற்குரியது ஆகும். அரசு இதையெல்லாம் பொருட்படுத்தாது வடமதுரைக்கான கழிநீர் பண்ணையை சக்கிமங்களத்தில் துவங்கிவிட்டது.

மேலாண்மையும் வகுப்புவாதமும் இணைந்து காணப்படும் நம் சமூகத்தில் நீர் மேலாண்மை பின்வரும் மூன்று வழிமுறைகளில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
· நீர் தேவையை உறுதி செய்தல்: நகரவாசிகளின் தினசரி தேவைகளை அரசு அமைப்புகள் அணைகள் மற்றும் ஆழ்குலாய்கள் மூலம் உறுதி செய்தல்.
·  நீர் அணுக்கத்தை மறுத்தல்: வைகை நீர் பாசனக் கண்மாய்கள் இன்று மானாவாரி ஆனதும், வயல்கள் தரிசானதும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
· அசுத்த நீரை சுமத்துதல்: கண்மாய்கள் விவசாயம் இன்று கழிவுநீரை சுமத்தல், அதன் பொருட்டு தானியங்கள்  விளைவித்தல், குடிநீரை விலைக்கு வாங்குதல்.
வைகை அணை கட்டியது, வைகையில் மணல் அள்ளியது, நதியை(கிருதுமால்) கழிவுநீர் கால்வாயாக்கியது, கழிவுநீர் விவசாயத்தை ஊக்குவித்தது, நிலத்தடி நீரை குடிநீருக்காக வணிகமாக்கியது   இவையனைத்தையும் வெறும் அரசு அதிகாரத்தால், ஆட்சியாளர்களை கையில் போட்டுக்கொண்டு மட்டும் நிகழ்ந்தவை அன்று. மாறாக பணத்தின் மூலம், சலுகைகளின் மூலம் பாதிக்கப்படுவோரின் சமூக ஒப்புதலை பெற்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது. உதாரணமாக மதுரை மக்களின் பண்பாட்டு அடையாளமான ‘அழகர் ஆற்றில் இறங்கும்’  நிகழ்வையொட்டி வைகையில் நீர் திறந்துவிடுவதன் வழியாக சமூக ஒப்புதலைப் பெறுதலை  சொல்லமுடியும்.


மேலாண்மை என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பிடுங்கி கொடுப்பதும், அவர் ஏற்படுத்திய கழிவை மற்றவரிடம் திணிப்பதும் அன்று. அது வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தும் வழிமுறைகளை வகுத்தல், சம அணுக்கத்தை வழங்குவதில் மற்றும் அச்சமில்லா எதிர்காலத்தை உருவாக்குவதிலிருந்து துவங்குகிறது. அதை உறுதி செய்வது அரசின் கடமை மட்டுமல்ல நம் கடமையுமே. கழனியில் நின்று கவலைபடுவதர்க்கு பதில் ஆட்சியில் பங்குபெறவேண்டும். அது மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்குகொள்வதில் இருந்து துவங்கட்டும்.



Saturday, November 19, 2016

கதை கதையாம் கண்மாயாம்

(நன்றி: என்னுடன் கண்மாய் கண்மாயாய் சுற்றிய தம்பி 'க்ரேசன் டோனி' க்கு)

உசிலங்குளம் கண்மாய்கள் சங்கிலித்தொடரில் மொத்தம் 114 கண்மாய்கள் இருந்தது. திருப்பரங்குன்றத்திலிருக்கும் தெங்கால் கண்மாயில் துவங்கி உசிலங்குளம் கண்மாயில் முடிகிறது இந்த சங்கிலித்தொடர். இதில் 36 கண்மாய்கள் மதுரை மாவட்டத்திற்கு உரியது. இவற்றில் 14 கண்மாய்களில் மதுரை மாநகராட்சி கழிவு நீர் கலக்கிறது. மற்ற கண்மாய்களுக்கு மழைநீரும், வைகையும், நிலையூர் கால்வாயிலிருந்து வரும் நீருமே ஆதாரம்.



அரசாங்கப் பதிவில் இருக்கும் 36 கண்மாய்களை பார்வையிடச் சென்றால் திருப்பரங்குன்றம், கல்லுக்குளம், பெருங்குடி மக்களுக்கு அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் அமைந்துள்ள இடமும், அதன் சரியான பெயரையும் அறிந்திருக்கவில்லை. ‘அபிசேகக்கட்டு’ என்ற கண்மாயை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரித்து தேடினோம். அந்த பகுதியில் வசிக்கும் எவருக்குமே தெரியவில்லை. இறுதியாக கீதாரிகளே கண்மாய்களுக்கு சரியாக வழி சொன்னார்கள். ‘அபிசேகக்கட்டு (எ) அவிசயத்தி’ கண்மாய்க்கு வழி சொன்ன கீதாரி கிழவி, ‘இப்ப சொந்த ஊர்காரன் யாருமே இல்ல. எல்லாம் வெளியூர்ல இருந்து வந்துருக்கானுவ. ஒருத்தனும் விவசாயம் பாக்கல. அப்பரம் எப்புடி கண்மாயப்பத்தி தெரியும்? செவிடன் காதுலப்போய் நீ சங்கூதிட்டு வந்திருக்க. எங்களப்போல கீதாரிக்கும் விவசாயிக்கும் தானே கண்மாய்க!’ என்று சொன்னாள்.


கருவை மண்டிக்கிடக்கும் அபிசேகக்கட்டு கண்மாய்


நீர் மேலாண்மையில் நம் சமூகப் பட்டறிவின் விளைவே கண்மாய்கள் மற்றும் அதன் சங்கிலித் தொடர்கள். அதிக வடிநீர் வரத்தையும் அதே சமயம் அதிக கொள்ளளவையும் உறுதிசெய்யும் அரை பிரைவடிவ  கண்மாய்களை ஆயிரம் ஆண்டுகள் முன்பே அமைத்தார்கள் நம் முன்னோர்கள். இங்கு தேக்கப்படும் நீரானது விவசாயத்திற்கும், கால் நடைகள் மற்றும் மனிதர்கள் தேவைகளுக்காகவும் பயன்படுகிறது.  பாசனத்திற்காக நீரைத் திறந்துவிட மடைகள் அமைக்கப்பட்டன. மடையைக்கொண்டு திறந்துவிடப்படும் கொள்ளளவே விவசாயத்திற்கு பயன்படும் நீர். மடையால் திறந்துவிடப்பட முடியாத கொள்ளளவு கால்நடைகளின் தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள். பொதுவாக வறண்ட பகுதிகளில் இந்த கொள்ளளவின் ஆழம் மடையின் அடிப்பகுதியில் இருந்து 3-5 அடி இருக்கும். ஆயிரம் ஆண்டுகள் முன்பு மரத்தால் மடைகள் அமைக்கப்பட்டன. நீர் தேவையின் போது கண்மாய்க்குள் குதித்து மடையை திறக்கும் சாகசக்காரர்கள் “மடையர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு நீரில் மூழ்கி மூச்சடக்கி மடையை திறக்கும்போது நீரின் சுழலில், வேகத்தில் சிக்கி இறந்தவர்கள் பலர். ஆகையால் மடையர்கள் மடை திறக்க நீரில் குதிக்கும் முன் அவர்களுக்கான இறுதி சடங்கை ஊரார் செய்வது வழக்கம். தான் இறந்தாலும் தன் குடும்பத்தை ஊர் காக்கும் என்ற நம்பிக்கையில் தன் குடி காக்க உயிரையும் துச்சமாக எண்ணியவர்கள் மடையர்கள். (நன்றி: ‘டி.எல்.சஞ்சீவிகுமாரின் ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’)


‘தகப்பன இழந்த பிள்ளைகள ஊர் காப்பாத்தும்னு நம்பி ஏமாந்தாங்க போல. அதுனாலதானோ என்னவோ மடையர்னா ஏமாந்தவன்னு ஆகிடுச்சு. ஆனா நாங்க அப்புடி இல்ல’ என்று ஆரம்பித்தார் ராமன்குளத்தைச் சேர்ந்த பெரியவர். ‘வைகைல மணல் அள்ளி பள்ளமா போச்சு, அங்க இருந்து எங்க கம்மாய்க்கு தண்ணி கொண்டார நிலையூர் காவா மேடுதட்டி போச்சு. போய் பாருங்க கம்மா கரைக்கு பின்னாடி வெறும் கருவ மரமாதான் நிக்கும். தண்ணி வந்து பல வருசமாச்சு. நெலம் தருசா போச்சு. அதான் ரோடு போட மண்ணு வேணும் ஊருக்கும் ரூவா தறோமுனு சொன்னானுவ. வாங்கிட்டு விட்டுட்டோம். ஆத்து தண்ணி விவசாயம் நின்னு பல வருசமாச்சு. பூரா பயலும் பம்புசெட்டு வச்சுருக்கானுவ, அதுலதான் வெளையுது மதுர மல்லி’.

தூர் வாரப்பட்ட பாப்பனோடை கண்மாய்

ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக தேவைப்படும் மண்ணை தனியார் நிறுவனம் கண்மாய்களில் அள்ளிக்கொள்ள மக்கள் அனுமதியோடு அரசு அனுமதித்தது. இப்படியாய் மண்ணுக்காக தூர் வாரப்பட்ட கண்மாய்களில் மதுரை உசிலங்குளம் கண்மாய்கள் சங்கிலித்தொடருக்கு உட்பட்ட ராமனோடை, சின்ன உடைப்பு, பாப்பனோடை, பெரியகுளம் கண்மாய்களும் அடங்கும். “தூர் தான் வருவான்னு நெனச்சா வேரையே வாரிபுட்டானுவ படுபாவிங்க” என்கிறார் பாப்பனோடை கிராம வாசி.
கண்மாயை பார்த்து அதிர்ந்தே போனோம். தூர் வாரப்பட்ட இந்த கண்மாயில் மடையின் அடிப்பகுதிக்கும் கண்மாயின் அடிப்பகுதிக்கும் குறைந்தது 12 அடி உயரம் இருக்கிறது. நம் சூழலில் மடை திறக்கப்படும் அளவிற்கு கூட கண்மாய் நிரம்பாது என்பது உறுதி. ஆனால் பாப்பனோடை கண்மாயின் நிலைமையை கண்டும் கூட அருகிலிருக்கும் சின்ன ஒடைப்பு மக்கள் விளித்துக்கொல்லாது தங்கள் கண்மாயையும் தூர் வார அனுமதித்துவிட்டனர். அங்கும் தூர் வாரும் பனி சிறப்பாக நடைபெறுகிறது.


சின்ன ஒடைப்பு கண்மாய் தூர்வாரி மண் அள்ளும் காட்சி


‘இந்த ஊருகாரன் எல்லாம் முட்டாக்...... நான் படுச்சு படுச்சு சொன்னேன் பப்பனோடை பயலுவ நெலமைதான் நமக்கும்னு. எவன் கேட்டான். எல்லாம் கட்சிகாரனோட சேர்ந்துகிட்டு பணத்த வாங்கிட்டு ஆடுறானுவ’. ‘வெவசாயிக்குதான் அந்த கம்மாயோட அருமை தெரியும். வெவசாயம்தான் போச்சே’ என்று ஆற்றமையுடன் தொடர்ந்தார் சின்ன ஒடைப்பு கண்மாய் விவசாயி. ‘ஆனா குதிரப்பட்டி மக்க ஒன்னா நின்னு சாதிச்சுபுட்டாங்கே. ஒரு புடி மண்ண அள்ள முடிஞ்சுதா? அவனுக ஏமாந்தவங்கே சின்ன ஒடைப்புக்காரனுவனு இங்க வந்து அள்ளுறானுவ’

குதிரைப்பட்டியை பார்க்க புறப்பட்டோம். பயணிக்கும் வழியில் போடோ பழங்குடியான ‘டீஜுள் புசுமுத்தாரி’ சொன்ன கதை நினைவிற்கு வந்தது. ஒரு மனிதன் இருந்தான். அவன் வேட்டையாடி வாழ்பவன். தினமும் ஒரு மரத்தருகே சென்று கதை சொல்வதையும், அவ்வப்போது பழம் கொண்டு வருவதையும் வழக்கமாய் கொண்டிருந்தான். ஒரு கோடை காலத்தில் வேற்று தேசத்துக்காரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். மரத்துக்கு கதை சொல்லிக்கொண்டு இருப்பவனை கண்டு வியப்படைந்தான். வினவினான். அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டு சிரித்தான்.

“அப்படியென்றால் பசித்தால் தான் சாப்பிடுவாயா?”

“ஆமாம். பசித்தால் தானே சாப்பிடவேண்டும்”.

“எனக்கு ஒரு பழம் கொடேன்”.

“நீ பசியோடு இந்த மரத்தடிக்கு வா. உனக்கான பழம் கீழே விழும்.”
எல்லாவற்றையும் கேட்டறிந்த வேற்று தேசத்துக்காரன் தன் பையில் இருந்த ஒரு பிடி விதைகளைக் கொடுத்து, “இதை விதைத்து, வரும் தானியங்களை உன் உணவுக்கு பயன்படுத்திக்கொள். ஒரு பிடியை மீண்டும் விதைத்துக்கொள். இதை சேமிக்கலாம், வேண்டும் சமயத்தில் சமைத்துக்கொள்ளலாம்” என்று கூறி விடைபெற்றான்.

மனைவியிடம் இந்த அதிசய விதைகளை பற்றி சொன்னான். பல யோசனைகளுக்குப் பின்னர் இருவரும் விதைகளை விதைத்தனர். தானியங்களை அறுவடை செய்தனர். நினைத்தப்போதெல்லாம் உண்டு மகிழ்ந்தனர். விவசாய நிலத்தை பெருக்கினர்.

காலம் கடந்தன. குழந்தைகள் பிறந்தன. மரத்துக்கு கதை சொல்வதை விடுத்தான். மரம் கொஞ்சம் கொஞ்சமாக வாடியது. பழம் தருவதையும் நிறுத்தியது. விளைந்த தானியங்களை அவன் குடும்பத்தினர் ஆசை தீர உண்டு வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மரத்தின் நிழல் விளைச்சலைக் குறைப்பதால் மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

திடீரென்று ஒரு நாள் கடும் வெள்ளம் வந்தது. பயிர்கள் முழுவதும் நாசமாயின. கொஞ்சமாய் சேமித்த தானியங்களும் தீர்ந்தன. அவன் குழந்தைகள் பசி தாங்காமல் அழுதன. அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. அவன் குழந்தைகளை தூக்கிக்கொண்டு  கதை சொல்ல துவங்கினான். ‘ஒரு காலத்தில் நம் ஊரில் ஒரு கிழவன் இருந்தார். அவர் தன் மகனுக்கு ஒரு மரத்தைக் காட்டி, “இது ஒரு அதிசய மரம். தினம் காலையும் மாலையும் இந்த மரத்தடியில் அமர்ந்து மரத்துக்கு கதை சொல்ல வேண்டும். இந்த மரம் உயிர் வாழ கதை சொன்னால் போதும். வேட்டையாடி ஏதும் கிடைக்காது, பசியோடு ஒருவன் அங்கு போய் அமர்ந்தால் இந்த மரம் பழம் ஒன்றை கீழே போடும். பழம் எங்கிருந்து வரும் என்று யாருக்கும் தெரியாது. அந்த மரம் இருந்தவரை யாரும் பசியோடு இருந்ததே இல்லை. அந்த மனத்தை...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே குழந்தைகள் கேட்டன, “அந்த மரம்  இப்ப எங்கப்பா?”   

இப்படியாய் கதை முடிகிறது(?).

குதிரைபட்டி சென்று சேரும்போது லேசாக இருட்டத்துவங்கியது. மளிகை கடையில் கண்மாய்க்கு வழி கேட்டோம். “கம்மாயப் பார்க்க வர நேரத்தப்பாரு. இந்த சந்துல சோத்தாங்கை பக்கம் திரும்பி, நேரா போயா கம்மாய் வந்துரும்” என்று அக்கறையோடு வழிசொன்னார் கடைக்கார அக்கா. கண்மாயை பார்த்தோம். கண்மாய் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தது.  தெளிந்த நீரைப்பார்க்கும்போது மனதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கண்மாயை காக்க விவசாய மக்களே ஒன்று திரண்டுள்ளனர், அரசிடம் தொடர்ந்து முறையிட்டு, மனுக்கொடுத்து, கொதிக்கும் தார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, தூர் வார வந்தவர்களை ஊருக்குள் விடாமல் தடுத்து, குளிக்க தனியே நீர்த்தொட்டி அமைத்து, தாங்களாக கண்மாயை சீரமைத்துள்ளனர். கண்ணும் கருத்துமாய்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.


Wednesday, September 7, 2016

சாதிச்சாமி

செல்லத்தாயிக்கு இன்று அத்தனை மகிழ்ச்சி. அப்பறம் இருக்காதா? கருவக்காட்டில் முண்டு கல்லாய் நின்ற அவள் குலசாமிக்கு இன்று கும்பாபிசேகம். அவளுக்கு திருமணமாகவேண்டுமென்று எத்தனை முறை வேண்டிருப்பாள். அவள் திருமணத்துக்கு கூட சிதறு தேங்காய் உடைக்கத் தவறவில்லையே. அதுமட்டுமல்லாமல், அவள் அம்மாவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு பார்க்கப்போகிறாள். கூட்டத்தோடு கூட்டமாக, கள்ளத்தனமாக.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து முக்கால் மணிநேர பேருந்து பயணத்தில் இருக்கிறது ஆயி கோயில். மற்ற கும்பாபிசேகக் கோயில் சாலைகள் போல, ஓரங்களில் ‘தலைவரே, பெரியவரே, சின்னவரே, தளபதியே, குலமே, இதயமே’ இப்படியாய் ஆரம்பித்து, ‘அடங்கமறு, நெருங்குனா பொசுக்குற கூட்டம், திமிறி எழு’ இப்படியாய் ப்ளெக்ஸ்கள் ஒன்றுகூட இல்லை. தனித் தலைவர்(?) ப்ளெக்ஸ்களை தாண்டி இளைஞர்கள், ஊர்மக்கள் ப்ளெக்ஸ்களில் ஒவ்வொரு சாதியும் தனதாக்கிக்கொண்ட மன்னர்கள் இடம்பெற்ற ப்ளெக்ஸ்கள் இல்லவே இல்லை. இப்போதெல்லாம் முன்புமாதிரி இல்லை. கோனாருக்கு வீரன் அழகு முத்துக்கோன், முத்திரையருக்கு பெரும்படுகு முத்துராஜா, தேவருக்கு மருது சகோதரர்கள், வண்ணானுக்கு வீர சிவாஜி, பள்ளருக்கு (தேவேந்திர குல வேளாளர்) தேவேந்திரன் இப்படியாய் நீள்கிறது பட்டியல். இம்மன்னர்களின் உண்மை புகைப்படங்கள் இல்லாதமையால் பாடிஸ்டா, ராக் போன்ற WWEகாரர்களை வரைபடங்களுடன் மார்பிங் செய்து போட்டுக்கொள்கிறார்கள். இக்கோயில் சாலையில் ‘அகமுடையார் சமூகக் கோயில் கும்பாபிசேகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இப்படிக்கு அகமுடையார் சமூகம்’ என்ற வாசகம் தாங்கிய சாமிப்படங்களுடனான ஒரே ஒரு ப்ளெக்ஸ் அகமுடயாரை மட்டும் வரவேற்றது அன்புடன்(?). இந்த வட்டாரங்களில் ஏற்பட்ட கோயில் சார்ந்த சாதிப் பிரச்சனையால் இப்போதெல்லாம் அவரவர் சாதிக்கு அவரவர் கோயில் என்றானது.

இரண்டு மாதங்கள் முன், சேரி (தலித்) மக்கள் கொண்டாடிய ‘முனி கோயில்’ திருவிழாவில் இடம்பெற்ற வீர வசனங்கள் இவர்கள் சாதி திமிரை திரியேற்றியதே இந்த அடக்கத்திற்கு காரணம். ‘நமக்கு எதுக்கு வம்பு? பெட்டிசன போடுவான், கோயில் கும்பாபிசேகம் சொணங்கும். அவன் சர்காரு அய்யரு’. சில வருடங்கள் முன்பு தங்களை சாமியென்று அழைத்த அதே சமூகம் இன்று அண்ணன், தம்பி என்று அழைப்பதை ஆதங்கத்துடன் இச்சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இவர்களின் சாதி வெறியும்  வணிகமே என்பதற்கு அங்கு ஒட்டப்பட்டுள்ள கத்தி, ரத்தம், வேல்கம்புடனான கிடாரி திரைப்பட சுவரொட்டிகள் சாட்சி.

இந்த ஊரில் சேரி மக்களுக்கு முனி கோயில், வண்ணானுக்கு அம்மன் கோயில், முத்திரையருக்கு அய்யனார் கோயிலிருக்க இங்குள்ள  4௦ அகமுடையார்  தலைக்கட்டுகளுக்கு இருந்த ஒரே கோயில் ஆயியின் காட்டுக்கோயில். தங்களுக்கென்று ஆனா கோயில் இல்லையே என்ற ஏக்கம் தொடர்ந்து இருக்க, இந்த ஊரின் வசதியான தலைக்கட்டு ஒன்றில் கடந்த 5 வருடங்களில் தொடர்ந்து உடல் சார்ந்த சிக்கல்கள். பூசை வைத்து கேட்டபோது ஆயிக்கு கோயில்கட்டாமல் இருப்பதாலேயே இவ்வளவு சிக்கல் என்று சொல்ல, ஜோராய்த் தொடங்கியது கோயில் வேலை. வெறும் கல்லாக இருந்தவளுக்கு சிலைவடிவம் கொடுத்தவன் குறி சொன்ன கோடாங்கி. இப்படித்தான் எல்லோருக்கும் பொதுவாக இருந்த காட்டுக்கோயில் இன்று அகமுடையார் சாதி கோயிலானது.


‘ஆயி’ சிறுதெய்வ வகையறா. சிறுதெய்வங்களுக்கு சில முக்கிய வரையறைகள் உண்டு. ஒன்று அவர்கள் கொல்லப்பட்ட அல்லது கொல்லத் தூண்டப்பட்ட கதை. மற்றது, தெய்வம் என்று நம்ப ஊரில் தெய்வத்தின் சக்தியை பற்றிய கதைகள். மூன்றாவது, பிராமணர் அல்லாத பிற சாதி பூசாரிகள்.

5௦௦ ஆண்டுகள் முன்பு, இலங்கையில் உள்ள கதிர் கிராமம் கதிரேசன்சாமியை குலதெய்வமாக கொண்டவர்கள் பெரியண்ணன், சின்னண்ணன் மற்றும் தங்கை ஆயி. தாய் தகப்பன் அற்றவர்கள். வியாபார நிமித்தமாக குதிரையில் பலமுறை இவ்வூருக்கு வந்தவன் பட்டானி (உருது பேசும் இஸ்லாமியரை பட்டாணி என்று அழைப்பது வழக்கம்). ஒருமுறை அண்ணன்கள் குலசாமியை கும்பிட இலங்கைக்கு சென்றபோது  ஆயியை கவர, பட்டானி குதிரையில் விரட்டினான். ஆயீ தன் மானம் காக்க காட்டுக்குள் ஓடி ஒளிந்து, பின் பயந்து அங்கு இருந்த பால மரத்தில் தூக்கிளிட்டுக்கொண்டாள். இதை கண்ட பட்டானி குதிரையில் தப்பியோடிவிட்டான். வந்த பார்த்த அண்ணன்கள், குதிரை தடம்கொண்டு பட்டாணியை கொன்று பழி தீர்த்தனர். மானம் காக்க உயிர்விட்ட ஆயி பெண் தெய்வமானாள். கொல்லப்பட்ட பட்டானி பிசாசாக பழிவாங்க நேருமோ என்று அவனையும் தெய்வமாக்கினர் சின்னணனும், பெரியண்ணனும். பின் வந்த அவர்களின் சந்ததிகள் இவர்களையும், இவர்கள் குல தெய்வமான கதிரேசனையும் சேர்த்து இந்த காட்டுகொயிலை வழிபட்டனர். இதுவே ஆயி கோயிலின் பொதுவான செவிவழிக் கதை.

இந்த ஊரில் பூவிற்று வாழ்ந்த பண்டாரத்தின் மனைவி சுள்ளி போருக்கையில் இருட்டில் கண் தெரியாமல் ஆயியின் கல்லை மிதித்த இரண்டே நாளில், ஆயி கனவில் வந்த பயத்தில் செத்துப்போனாள். மாதவிடாய் காலத்தில் கதிர் அறுக்க வந்த சேரிப் பெண் ஒருத்தி கோயிலில் குறுக்கும் நெடுக்கும் கடக்க வலிப்பு வந்து அங்கேயே கிடந்தாள். ஆயி கோயிலில் இருந்த மரங்களை வெட்டி கரிமூட்டம் போடுபவனிடம் விற்றனர் ஊர் மக்கள். கரிமூட்டம் போட்டபோது, அக்னி வடிவாய் பெண் உருவம் ஒன்று எழுந்து வர, வியாபாரி உடல் வியர்த்து அங்கேயே மயங்கி விழுந்தான். இப்படி கதைகள் பல ஆயியின் சக்தியை காதில் காற்றில் உலவவிடுகிறது.

முன்பு காட்டுக்குள் ஆற அமர பெரியண்ணன், சின்னண்ணன், முனி, கதிரேசனின் மற்றும் பட்டானியுடன் எளிமையாய் இருந்தவளுக்கு, இன்று ஒன்றுமே புரியவில்லை. கோயில் காடு மொத்தமாக அழிக்கப்பட்டு மேடைகளில் தெய்வங்கள் வீற்றிருக்கிறார்கள். இப்போது கோயிலில் முதன்மை தெய்வமாக கதிரேசனும், கதிரேசன் முருகனே என்றும், முருகன் இருந்தால் விநாயகர் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையால் அவரும், பட்டாணி சாமியும் முனீஸ்வரரும், அம்மன் வடிவில் ஆயியும், பெரியண்ணன், சின்னண்ணன் பெரியகருப்பர், சின்னகருப்பராக திரிக்கப்பட்டு, இவர்களுடன், சன்னாசி, ராக்காச்சியம்மன், தூண்டில்காரன், முன்னோடியான் மற்றும் கண்ணிமா பெண்கள் புதிமனை புகுந்திருக்கிறார்கள். தன்மானத்திற்காக உயிர்விட்டவளுக்கு சாதிக்காக அம்மன் சிலையானத்தின் செருக்கு முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.

கோயிலுள் நுழையும்போது தலைகட்டுக்கு ஒரு ஆண் வேட்டி சட்டையில் இடுப்பில் துண்டோடு வாயிலில் நின்று வணக்கத்துடன் வாங்க வாங்க என்று செல்வத்தைமட்டும் அழைத்தார்கள். ஆண்களை மட்டும். பெண்கள் வருகையில் கையை கீழிறக்கி கண்டுகொல்லாததுபோல் நின்றார்கள். பந்தலிலும் செல்வம் தனி தனிவரிசையிலும் செல்லத்தாயி தனிவரிசையிலும் அமர்ந்தனர். இவை அகமுடை(?)யார்களின் வழக்கம்.

வண்ணான்கள் தீப்பந்தம் பிடித்து முன்னே நடக்க, ஊர் தலைவர் வேல்கம்புடன் வளம் வர, எங்கிருந்தோ வந்த 3 கிருஷ்ணப் பருந்துகள் கும்பம் மீது வட்டமிட, பிராமணர்களைக் கொண்டு கும்பாபிசேகம் இனிதே முடிந்தது. கிருஷ்ணப் பருந்துகள் வந்ததை பற்றி பேச்சுகள் தொடர்ந்தன.

‘எல்லாம் ஆயியின் அருளு’. 
ஆயி புன்னகைத்தாள்.

‘அய்யரு மந்தரம் நல்லா சொல்லிருக்காரு அதான்’. 
ஆயி முறைத்தாள்.

‘கூட்டத்தை எங்க பார்த்தாலும் வந்துரும். இதெல்லாம் பெரிய விசையம்னு போக்கெத்த பயலுவ நின்னு பேசுறீக’ என்ற செல்வத்தை மனைவி தனியாக அழைத்து,

‘அம்மா முடியாம இருக்காம். கோயிலுக்கு கூட வரல. ஓரெட்டு போய் பார்த்துட்டு வந்துறட்டா?’ என்றாள் செல்லத்தாயி.

‘சொன்ன செருவாட கொடுக்க துப்பில. போறாளாம் ஆத்தா வீட்டுக்கு. நம்ம சாதிக்காரவுக கோயில் கும்பாபிசேகம்னுதான் இந்த மண்ணையே மிதுச்சேன். என்ன கொலகாரனாகிடாத. வந்துட்டா! ஆத்தா ங்கோத்தானு. போடி போய் வண்டிகிட்ட நில்லு வரேன்’ என்றான் செல்வம்.  
விறு விறு வென்று வரதட்சணையாகக் கொடுத்த வண்டியை நோக்கி செல்லத்தாயி நடக்க. ஆயி சிலையானாள்.